Saturday 27 April 2013

TAMILNADU ENGINEERING GRADUATE SCHEME


பிளஸ்–2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் சேர முடிவை நோக்கி இருக்கும் மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை இப்போதே பெற்று தயாராக வைத்திருங்கள் என்று அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.




தமிழ்நாட்டில் 552 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சேர 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் ஒற்றைச்சாளர முறையில் அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்கிறது.

இந்த கவுன்சிலிங்கை சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் வருடந்தோறும் நடத்தி வருகிறது. வருடந்தோறும் என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதுபோல பி.இ. படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 10–ந்தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முன்னதாக பி.இ. படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணாபல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு மையங்களில் விநியோகிப்பது வழக்கம். அதுபோல இந்த வருடமும் பிளஸ்–2 தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாக விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட உள்ளன. ஆனால் அதற்கான தேதியை இன்னும் அண்ணாபல்கலைக்கழகம் வெளியிடவில்லை.

வழக்கமாக என்ஜினீயரிங் சேரும் மாணவர்கள் கவுன்சிலிங்கிற்காக விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.

அதுபோல சுதந்திரபோராட்ட வீரர் வாரிசாக இருந்தால் அதற்குரிய சான்று, முன்னாள் ராணுவத்தினர் மகளாக, மகனாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, சொந்த நாட்டில் வசிப்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும்.

ஆனால் பலர் கவுன்சிலிங் நேரத்தில் சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். எனவே இப்போதே அந்த சான்றிதழ்களை தேவைப்படுபவர்கள் உரிய அதிகாரிகளிடம் பெற்று தயாராக வைத்திருக்கவேண்டும்.

இந்த அறிவிப்பை அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் காளிராஜ், என்ஜினீயரிங் மாணவர்சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் வேண்டுகோளாகவிடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதற்காக விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் தயாராக வைக்கப்பட இருக்கின்றன.

இந்த வருடமும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் என்ஜினீயரிங் படிப்பில்சேர இடம் கிடைக்கும் என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

We are always welcoming both positive and negative comments.